Thursday, June 28, 2007

ஊர்களும் அதன் பெயர்களும்!

அன்பார்ந்த நண்பர்களே!! இந்த வலைப்பதிவைத் தொடங்கும்முன் உங்கள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை! இப்பதிவை நான் முழுவதும் தூய தமிழில் எழுதலாமென்று முடிவு செய்துள்ளேன்! ஆகையால் பலவீனமான இதயம் உடையோர் மேற்கொண்டு படிப்பதைப்பற்றி நன்கு யோசித்து செயல்படுங்கள்! பதிவுக்கு செல்வோமா?

நான் படிப்பது இயந்திரவியல் எனினும், வரலாற்றின் மேல் எனக்கு அளவு கடந்த காதல் உண்டு! (வரலாறு பாடத்தின் மேல்! ‘வரலாறு’ படத்தின் மேல் அல்ல!) வியப்பூட்டும் செய்திகள் வரலாற்றில் பல இருப்பினும், இன்று நாம் வசித்து கொண்டிருக்கும் ஊர்களுக்கு பெயர்கள் எப்படி வந்தன என்று பார்த்தோமானால், அவற்றின் பின் உள்ள கதைகளும், நிகழ்வுகளும் மிகவும் சுவாரசியமானவை! ஏதோ எனக்குத் தெரிந்த மட்டில் சில ஊர்களைப்பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

சென்னை:

தமிழகத்தின் தற்போதைய தலைநகருக்கு சென்னை என்று பெயர் ஏற்பட்டது, ஆங்கிலேயர் காலத்தில்! அக்காலத்தில் நம் நாட்டையும் அதன் வளங்களையும் பங்கு போட்டு கொள்வதில் ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கடும் போட்டி இருந்தன! அப்போதைய மதராஸ் ராஜதானி இருந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்தபொழுது போர்த்துகீசியர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒரு கோட்டை கட்ட வேண்டுமென்று முடிவு செய்தனர்!

கோட்டைக்கு நிலம் தேடிக்கொண்டிருந்த பொழுது இப்போது கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தினருகே கோட்டையை அமைத்தால் உள்நாட்டு வாணிபத்துக்கும் கடல் வாணிபத்துக்கும் உதவியாக இருக்குமென்று எண்ணினர். அப்போது சென்னை இருந்த இடம், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு நிலச்சுவான்தாரிடம் இருந்தது. அவரும் ஆங்கிலேயர்களுக்கு தம் நிலத்தை அளிக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்! ஆனால் புதிதாக உருவாகும் அவ்விடத்துக்கு தம் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை சூட்ட வேண்டும் என்று விழைந்தார்.

அதன் பெயரிலே அவ்விடத்துக்கு சென்னை என்று பெயர் வழங்கப்பட்டது! ஆங்கிலேயர்கள் அன்று கட்டிய கோட்டைதான் இன்று பல அரசியல்வாதிகள் உள்ளே நுழைவதற்கு பகீரதப்பிராயத்தனம் செய்து கொண்டிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை!!

வீராணம் ஏரி:

சென்னையைப்பற்றி பார்த்தோம்! சென்னையின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியைப்பற்றிப் பார்ப்போம். வீரநாராயணபுரம் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என்றாயிற்று. இப்போதய கடலூர் மாவட்டத்தில் இருக்கும் இவ்வேரி சோழர் காலத்தில் எடுப்பிக்கப் பட்டது. ‘பொற்கூரை வேய்ந்த தேவர்’ என்றழைக்கப்படும் பராந்தக சோழர் இவ்வேரியை தூர் வாரி கரை எழுப்பினார்.

அப்பொழுதைய கால்த்தில் இவ்வேரி அமைந்த இடம், பாரேழு வள்ளல்களில் ஒருவரான ‘வல்வில் ஓரி’யின் வழி வந்த கடம்பூர் சிற்றரசுக்கு அருகில் இருந்தது. வழி வழியாக சோழ குலத்துக்கு தோள் கொடுத்த கடம்பூர் சிற்றரசின் மக்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டே பராந்தகச்சோழர் இவ்வேரியை ஏற்படுத்தினார்.

கோயம்புத்தூர்:

முன்னொரு காலத்தில் கோவன் என்ற கொங்கு நாட்டை சேர்ந்த சிற்றரசன் புதூர் எனும் பகுதியை ஆண்டு வந்தான். ‘கோவன் ஆண்ட புதூர்’ என்பதே காலப்போக்கில் மருவி கோயம்பத்தூர் என்றாயிற்று.


திருநெல்வேலி:

தாமிரபரணி ஆற்றினாலேயே திருநெல்வேலிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது. இப்பொழுது மிகவும் சிறியதாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன! அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருநெல்வேலி இப்பொழுது இருந்த இடத்தில் நெல் பரவலாக பயிரிடப்பட்டிருந்தது. தாமிரபரணி நதியானது, நெல்லை வழியாக பாயும்பொழுது, பாசனத்துக்கு தண்ணீர் அளித்ததோடில்லாமல் ஆற்றின் கரைகளையும் பலப்படுத்திக்கொண்டே சென்றது! ஆகையால் எத்தகைய வெள்ளமும் அச்சீமையில் விளைந்திருக்கும் நெல்லை ஒன்றும் செய்ய முடியவில்லை. நெல்லுக்கு வேலியாய் இருப்பதினால் நெல்வேலி என்றும், அருள்மிகு நெல்லையப்பர் எழுந்தருளியுள்ளதனால் திரு என்ற அடையுடன் திருநெல்வேலி என்றும் பெயர் பெற்றது!

என் இன்னொரு நண்பர் கூறியதாவது:

ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன், நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பேர் வந்ததாக இருந்த்து.

எது உண்மை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :)

தஞ்சை பெரிய கோயில்:

பொன்னியின் செல்வன் எனப்படும் இராஜ இராஜ சோழன் எழுப்பிய கோயில் இப்பெரிய கோவில் ஆகும். பொன்னியின் செலவர் வாலிபராய் இருந்தபொழுது அவருடைய தந்தை சுந்தரசோழர் ஆட்சி புரிந்தார். அப்பொழுது பாண்டியனுக்கு உதவி செய்த இலங்கை அரசன் மகிந்தனை அடியோடு அழிக்கும் பொருட்டு இலங்கை சென்றிருந்தார். அங்கே மகிந்தனின் படைகளை துரத்தி ‘ஈழங்கொண்ட வீரர்’ என்ற பட்டத்தையும் பெற்றார். ஓடி ஒளிந்த மகிந்தனை தேடி சிலகாலம் இலங்கையில் தங்க நேர்ந்த பொழுது அங்கு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருந்த புத்த சிலைகளை கண்டு வியப்புற்றார். பிற்பாடு தான் சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு, உலகமே வியக்கும்படி தமிழகத்தில் இத்தைகைய விண்ணுயர சிவாலயங்களை எழுப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். அதன் பெயரிலேயே சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தார்.இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை எனும் ஊர், சென்னையிலிருந்து 112 km தூரத்தில் உள்ளது! தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடம் என்று கூறும் அளவிற்கு தோல் தொழிற்சாலைகளால் நிரம்பியுள்ளது! இராணிப்பேட்டைக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று பார்த்தோமானால், ஆங்கிலேய பிரபு ஒருவரும் அவர் துணைவியும் அலுவல் நிமித்தமாக ராணிப்பேட்டையில் தங்கியிருந்தனர்! ஆங்கிலேயரின் துணைவியாருக்கு இந்திய கலாச்சாரத்தின் மேல் அளவு கடந்த பற்று! அப்பொழுது உடன் கட்டை ஏறுதல் தமிழ் கலாசாரத்தில் மிக்க பரவலாக காணப்பட்டது!

அதே போல் அப்பிரபு உயிர்துறந்தபின் ஆங்கிலேய ராணி, தமிழ் பெண்களைப்போலவே உடன்கட்டை ஏறி தம் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் தியாகத்தினாலேயே ராணிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது!

நண்பர்களே! ஏதோ எனக்கு தெரிந்த வரையில் சில ஊர்களைப்பற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கும் இதைப்பற்றி தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். கண்டிப்பாக பதிவில் ஏற்றி விடுகிறேன்!

அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்வரை விடை பெறுகிறேன்!

வணக்கம்!!

13 comments:

CVR said...

அட!!
இவ்வளவு மேலதிக தகவல்களை அள்ளி வீசி இருக்கிறீர்கள்!!
இன்றைக்கு உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!!
மேலும் இது போன்ற பல பதிவுகளை எங்களுக்கு தர வாழ்த்துக்கள்!! :-)

cdk said...

கண்டிப்பாக அண்ணாத்தே!!

உங்கள் மகிழ்ச்சியைத்தவிற யாதொன்றும் நான் அறியேன் பராபரமே!!

(டயலாக் எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதா?) :)

Anonymous said...

good one!

cdk said...

@ துர்கா!!

நன்றி நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்வரவு cdk! நல்ல துவக்கம்!

//வீரநாராயணபுரம் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என்றாயிற்று//

ஊரின் பெயர் காட்டுமன்னார் கோவில்!
அங்குள்ள புகழ் பெற்ற ஆலயம் தான் வீர நாராயண பெருமாள் ஆலயம்! அந்த பெயரே ஏரிக்கும் வந்து விட்டது!

பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி இந்த ஏரி பற்றிப் பல குறிப்புகள் தருவார்! கதையே இங்கிருந்து தான் துவக்கம்!

//அப்பிரபு உயிர்துறந்தபின் ஆங்கிலேய ராணி, தமிழ் பெண்களைப்போலவே உடன்கட்டை ஏறி தம் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் தியாகத்தினாலேயே ராணிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது!//

பெயர்களும் தந்தால் செய்தி இன்னும் உறுதிப்படும்! (அட எங்கூருக்குப் பக்கத்து ஊருங்கோ :-)

நட்டு said...

ஏனுங்க! இந்த தமிழ் மணத்துக்குள்ளே எப்படி பூந்தீங்க?நானும் கொஞ்சம் உள்ள வரலாமுன்னுதான்.

Anonymous said...

தமிழ்மணத்திற்கு வருக வருக என்று வரவேற்கின்றோம்.தம்பி அண்ணா சிவிஆர் தமிழ்மணம் சூட்சமம் எல்லாம் சொல்லி கொடுத்தாரா இல்லையா?சொல்லி இருப்பார் என்று நினைக்கின்றேன்.அவர் பேச்சை கேளுங்கள்.அப்புறம் நீங்களும் நம்ப அண்ணாச்சி ரேஞ்சுக்கு பெருச வருவீங்க :D

பாபு மனோகர் said...

'இப்பொழுது மிகவும் சிறியதாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன'

இந்த மாதிரி விசயங்களைச் சற்று ஆதாரப்பூர்வமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்.அல்லது இதற்கான சுட்டி அல்லது இது சம்பந்தமான நூல் பெயர்களையாவது சொல்லியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தகவல்களுக்கு நன்றி.

cdk said...

@ krs

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! பொன்னியின் செல்வன் நானும் படித்திருக்கிறேன்!

எந்த ஊரு பாஸ் நீங்க??

cdk said...

@ துர்கா அக்கா

நீங்க சொல்லி நான் கேக்காம இருப்பேனா? கண்டிப்பா செஞ்சுட்றேன்!

cdk said...

@ பாபு மனோகர்

சி.மகேந்திரனின் "ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் அவை! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

cdk said...

@ பாபு மனோகர்

சி.மகேந்திரனின் "ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் அவை! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

ILA(a)இளா said...

Great Post and Info