Tuesday, November 20, 2007

அழுகிய தமிழ்மகன் - விமர்சனம்!


இப்படி கூட ஒரு படம் எடுக்க முடியுமா? னு நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பொதுவா விஜய் படத்தை பார்க்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை உண்டு எனக்கு. அன்னைக்கு ஓசி சோறு (அதாங்க treat) போடுறாங்கன்னு வந்தவனை அப்படியே பார்சல் பண்ணி தியேட்டருக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க பாவிப்பசங்க!! சரி பாட்டெல்லாம் கேக்கறதுக்கு நல்லா இருந்துச்சே, அதையாவது ரசிப்போமேன்னு போனேன்!

டைட்டில்ல டைரக்டர் பேர் பரதன் ன்றதை Bhharathhhhhhan ன்னு போட்டப்பவே மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது! இருந்தாலும் தைரியமா உக்காந்திருந்தேன்! படத்துல விஜய் ஒரு ஓடுகாலி! அதாவது ஓட்டப்பந்தய வீரர். இப்ப இந்த படம் தியேட்டரை விட்டு தியேட்டர் ஓடுற வேகத்துக்கு ஓடுவார்னா பார்த்துக்கோங்க! அவர் ஓடுனா தோத்துடுவோமுன்னு பயப்படுற ஒரு சக ஓடுகாலி, அவரை தீர்த்து கட்டுறதுக்காக ரோட்டுக்கு நடுவுல ஒரு கயிறு கட்டிவிடுறான். நம்ம ஹீரோ பைக்ல காத்தை கிழிச்சிகிட்டு (இந்த படத்துல என்ன கிழிச்சேன்னு யாராவது கேள்வி கேட்டா பதில் சொல்லனுமில்ல!) வர்றார். நம்ம ஹீரோ எவ்ளோ பெரிய தில்லாலங்கடின்னா, அந்த கயித்து மேல உக்காந்துகிட்டிருக்கிற பட்டாம்பூச்சியை பார்த்து வீலீங் பண்ணி சதியை முறியடிக்கிறாராம்! நோட் பண்ணுங்கடா! நோட் பண்ணுங்கடா! அதுக்கப்புறம் வழக்கம்போல ஒரு ஃபைட் ஒரு பாட்டு!

பாட்டுல பார்த்தீங்கன்னா, விஜய் கூட ரேஸ் ஓட்டுறவங்க, வக்கீல், டாக்டர், கடற்படை வீரர்கள் ன்னு நிறைய பேர் ஆடுறானுங்க! விட்டா ராணுவ தளபதி, ஜனாதிபதியெல்லாம் வந்து ஆடுவாங்க போல இருக்கு!

ஏ.ஆர் ரகுமான் ஏண்டா இந்த படத்துக்கெல்லாம் இசையமைச்சோம்னு ஃபீல் பண்ணி கதறி கதறி அழதுட்டிருக்கிறாரம். அந்த அளவுக்கு பாட்டு எல்லாத்தையும் கொதறி வெச்சிருக்கானுங்க!

படத்தோட நாயகி ஸ்ரேயா! சென்ஸார்னு ஒண்ணு இருக்கேன்ற ஒரே கரிசனத்துல தான் துணி போட்டிருக்காங்க போல இருக்கு! அந்த அளவுக்கு துணி பஞ்சம். எல்லா படத்துல வர்ற அரைலூசு ஹீரோயின் மாதிரி தான் இவங்களும். ஹீரோ தியாகம் பண்றதை பார்த்து காதல்ல தொபுகடீர்னு விழுந்துற்றாங்க! ஏண்டா டேய், அது எப்படி கரெக்டா ஹீரோயின்னுக்கு கேக்குற மாதிரியே இடம் பார்த்து போய் பேசுறீங்க!

அப்படியே கதை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் தெரியுது, விஜய் ஒரு தமிழகத்து நாஸ்ட்ரடாமஸ்னு! அவருக்கு extra sensory perception இருக்குதாம்! அதாவது எதிர்காலத்தை இப்பவே தெரிஞ்சுக்கிற பவர். நீங்க உங்க மனசுக்குள்ளே கெட்ட வார்த்தையால திட்டுறது புரியுது! அப்ப நேர்ல பார்த்த நாங்க எவ்வளவு திட்டியிருப்போம்னு பார்த்துக்கோங்க!

இதுக்கு மேல அந்த கதையைப்பத்தி நான் சொல்ல மாட்டேன்! ஏன்னா சொல்றதுக்கு கதைன்னு ஓண்ணுமில்ல!

அதுக்கப்புறம் ரெண்டாவது விஜய் எண்ட்ரி. ரெண்டு விஜய்க்கும் ஸ்டைல்தான் வித்தியாசமாம். டேய் குருவி மண்டையா! நீ எதை ஸ்டைல்னு சொல்றன்னே புரியலையேடா!

படத்தோட ஹைலைட் என்னன்னா படத்துல நமீதா வர்றாங்க! நம்ஸ்! உன் முகம் குழந்தைத்தனமா இருக்கு! அதுக்குன்னு குழந்தைங்க போடுற டிரெஸ்தான் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன அர்த்தம்! இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்! நம்ஸோட அப்பா சூரத்துல துணி வியாபாரம் பண்றாராம்! என்ன கொடுமை சரவணன் இது! (சிவீஆர் அண்ணா! உங்க தலைவியை பத்தி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க!)

ஷகிலா எதுக்கு படத்துல வர்றாங்கன்னே புரியலை! அப்புறம் இந்த சாயாஜி ஷிண்டே! அஜக்கு மாதிரியே பேசிட்டு திரியுறாரு!

கிளைமாக்ஸ்ல ஒரு கொடுமை! இது வரைக்கும் விஜய் தான் டயலாக் பேசி வில்லனை திருத்துவார். இந்த படத்துல ஹீரோயின் டயலாக் பேசி திருத்துறாங்க! இன்னொரு கொடுமை என்னன்னா டைட்டில்ல இதய தளபதி, டாக்டர் விஜய்னு போடும்போது நம்மால வாந்தி எடுக்காம இருக்க முடியலை! எப்படி வேணும்னாலும் படம் எடுக்கலாம்! நம்ம கேக்குறதுக்கு ஆள் இல்லைன்ற தைரியத்துல படம் எடுத்திருக்காங்க டைரக்டரும் ஹீரோவும்!

ஆக மொத்ததில் அழகிய தமிழ்மகன், அழுகிய வாழைப்பழத்தை சாப்பிட்ட மாதிரி இருக்கு!!

Saturday, August 25, 2007

பீட்டர் விட்டு ஆப்பு வாங்குனவங்க!!

நாட்டுல இவிங்க மாதிரியே நிறைய பேரு சுத்துறாங்கப்பா! மனசுல பெரிய எமினம்னு நினைப்பு!!

Friday, August 24, 2007

டி ஆர் இன் காதல் கவிதை!!நம்ம விஜய டி ஆர் த்ரிஷா கிட்ட காதலை சொன்னார்னா எப்படி இருக்கும்ன்ற ஒரு விபரீத கற்பனை!

அன்பே த்ரிஷா,
நீ தான் என் மோனாலிசா

இழுக்க இழுக்க வர்றது ஜவ்வு!
நான் உன்னை தாறுமாறா பண்ணுறேண்டி லவ்வு!

ரவையை வெச்சு கிண்டுறது உப்புமா!
நீ என்னை கண்டுக்காம இருக்குறது ரொம்ப தப்புமா!

முட்டையை உடைச்சா போடுறது ஆம்லேட்டு
என்னைப் புரிஞ்சுக்கிறதுல எப்பவுமே நீ லேட்டு!

சின்ன பசங்க ஆடுறது கோலி
உங்கப்பன் என்னை பார்த்தான்னா நான் காலி!

ஆற்காட்டில ஃபேமஸ் பிரியாணி
நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் மண்டைல நான் அடிப்பேன் பெரிய ஆணி

டி ஆர் னு சொன்னா ஞாபகம் வர்றது தாடி!
நீ கண்டிப்பா வருவ என்னைத்தேடி!

ஆக மொத்தம் நீ தான் என் டிஸ்னி வேர்ல்டு!
நம்ம காதலுக்கு உங்கப்பன் தான் ஆக்ஸா பிளேடு!!

இதுக்கு நம்ம திரிஷா ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி கமெண்டிட்டு போங்க!!இது என் பதிவை கஷ்டப்பட்டு படிச்சதுக்காக போனஸ்!! :)

போடுங்கப்பா வோட்டு!!

Thursday, August 9, 2007

கூவம் நதிக்கரையிலே

கடைசியா பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! உருப்படியா ஒரு பதிவு போட்டா என்னன்னு ஒரு எண்ணம்! மறுபடியும் வரலாறு பத்தியே எழுதலாம்னு முடிவு பண்ணி எதை பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டுருந்தப்ப சென்னை பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன். சென்னைன்னு சொன்னவுடனே நம்ம ஞாபகத்துக்கு வர்றது கூவம் தானே!

இதுக்கு மேல ஒரு நதியை அழுக்காக்க முடியாதுன்றதுக்கு சிறந்த உதாரணம் கூவம்! கூவத்தோட வரலாற்றைப் பாத்தோம்னா “எப்படி இருந்த கூவம் இப்படி ஆகிடுச்சுன்னு” கண்டிப்பா வருத்தப்படாம இருக்க மாட்டோம்! இப்ப அது இருக்கற நிலைமையிலே நதிக்குள்ள தான் குதிக்க முடியாது! அதோட வரலாறுலயாவது குதிப்போம் வாங்க!

கூவத்தைப் பத்தி வரலாற்றுக்குறிப்புகள் ஏராளமாக குவிந்து கிடக்குது! 1640 ஆம் ஆண்டு கிளைவ் டே எனும் ஆங்கிலேயத் தளபதியின் கீழ் வந்த வர்த்தகக் குழுவினர் முதன் முதலாக தரையிறங்கிய இடம் கூவம் நதிக்கரைலதான்! வெளி வாணிபத்துக்கு கடல் வழியாகவும், உள் வாணிபத்துக்கு நதி வழியாகவும் பயணம் செய்ய சுலபமா இருக்கும்ன்றத்துக்காக அவங்க தேர்ந்தெடுத்த இடம் கூவம். அவங்க வாணிபத்துக்காக கட்டின கோட்டை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. இதை பத்தி விரிவா இன்னொரு பதிவுல எழுதியிருக்கேன்.

அப்ப கூவம் நதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்துல ஓடிட்டிருந்துதாம். பின்னாடி கோட்டை விரிவாக்கத்துக்காக அதோட ஒடுபாதையை மாத்தி புதுசா கால்வாய் வெட்டினாங்க! அப்ப ஆரம்பிச்சதுதான்! இன்னிக்கு வரைக்கும் கூவத்துக்கு தொடர்ந்து ஆப்பு வெச்சுகிட்டேதான் இருக்காங்க!

கூவம் ஏன் இப்படி ஆச்சுன்னு பாத்தா ஒரு விநோதமான வேற்றுமை கிடைக்கும்! சென்னையில இருந்து 70 கிமீ தள்ளி கூவம்ன்ற பேர்ல ஒரு கிராமம் இருக்காம். தொடர்ச்சியா 75 குளம் இருக்குற இந்த கிராமத்துல இருக்கிற ஒரு ஏரி தான் கூவத்துக்கு பிறந்த இடம் என்கிறார்கள். முன்னாடி கூவம் நல்லா சீரும் சிறப்புமா ஓடி சென்னையோட தண்ணீர் தாகத்தை தீர்த்துட்டு இருந்துச்சாம்.

ஒரு காலத்துல சென்னையோட தண்ணீர் தேவையை தீர்க்கிறத்துக்காக கூவத்துக்கு நடுவுல கேசவரம்னு ஒரு அணையை கட்டி அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு எடுத்திட்டு போயிட்டாங்க. சுற்று சூழல் கெட்டு போகாம இருக்கிறத்துக்காக ஒவ்வொரு நதியிலையும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஓடுணம்னு ஒரு சட்டமே இருக்கு. அதை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம இப்படி திருப்பி விட்டது தான் கூவத்துக்கு ஒரு பெரிய ஆப்பா அமைஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க!

பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் திரு பச்சையப்பன் முதலியார் வாழ்க்கையைப்பத்தின ஆவணங்கள்ல கூவம் பத்தி நிறைய செய்தி இருக்கு! தினமும் காலையில் பச்சையப்பன் முதலியார் கூவத்துல குளிச்சுட்டு பக்கத்துல இருக்குற ஆலயத்துல கோயில்ல வழிபடுவார்னு அவரோட டைரிக்குறிப்புகள்ல எழுதியிருக்கு! இப்ப கூட கூவத்துல குளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!! என்ன, குளிச்ச பிறகு அவர் எழுதுன மாதிரி டைரி எழுதறத்துக்கு தான் ஆள் இருக்கமாட்டாங்க!

நம்ம முன்னாடி பாத்த மாதிரி கூவத்துக்கு நீர் வரத்து குறைய ஆரம்பிச்சதிலிருந்து கூவம் டேமேஜ் ஆக ஆரம்பிச்சிடுச்சு! சென்னையோட மக்கள் தொகை 70 லட்சம். இவிங்க அத்தனை பேரோட கழிவு தாங்கியாக கூவம் மாறிடுச்சு!

இன்னைக்கு சென்னையில குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் ஒரு சரியான நதி இல்லாததுதான்றது பலரோட கருத்து! கையில தர்பூசணி வெச்சிகிட்டு செர்ரி பழத்துக்கு அலையுற மாதிரி (அடடடா என்ன உவமை! என்ன உவமை!) கூவத்தை டேமேஜ் பண்ணிட்டு தண்ணிக்காக வீராணம் வரைக்கும் பைப் போடறாங்க! இனிமேலாவது கூவத்தோட பாதைல இருக்கிற ஆக்கிரமுப்புகளை எல்லாம் அகற்றினாலாவது கூவம் ஓரளவுக்கு சரியாகுதான்னு பாப்போம்!


முடிக்கும் போது ஒரு பஞ்சோட முடிக்க வேணாமா! கூவம் ன்ற வார்த்தைக்கு “தூய ஊற்று நீர்”னு அர்த்தமாம்!! என்ன கொடுமை சரவணன் இது!!!

Tuesday, July 10, 2007

நாங்களும் எட்டு போட்டுட்டோம்ல!!

என் இனிய தமிழ் மக்களே!! (சும்மா ஒரு பாரதிராஜா எஃபெக்ட் கொடுக்கலாம்னுதான்). சிவனேனு கிடந்த என்னை எட்டுப்பதிவு போட சொல்லி கோர்த்து விட்டுட்டாரு நம்ம சிவீஆர் அண்ண்ன்! அது என்ன பெரிய கம்ப சாஸ்திரமா? நாமும் ஒரு கை பார்க்கலாம்னு துணிஞ்சு இறங்கி ஒரு சில எட்டுப் பதிவை படிச்சேன்! நம்ம பத்தி பெருமையான எட்டு விஷயங்கள சொல்ல்னுமாமே? முதல் பால்லயே கிளீன் போல்ட் ஆக்கிட்டாங்களேப்பா!! ‘ஏன் பிறந்தாய் மகனே’ ன்னு வீட்ல பாடிட்டு இருக்கும்போது நான் பாட்டுக்கு “நான் வல்லவன்! நல்லவன்! நாளும் தெரிஞ்சவன்! நாகரிகம் அறிஞ்சவன்”னு கதை விட்டேன்னு வெச்சுக்கங்க, வலைப்பதிவுன்னு கூட பாக்காம நிறைய பேர் கல்லை விட்டு அடிச்சுருவாங்க!

ஆனா நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு எழுத சொன்னதுக்காக ஏதாவது எழுத வேண்டாமா? சின்ன வயசுல இருந்தே கிறுக்குத்தனமா பல காரியம் பண்ணியிருக்கேன் அதுல ஒரு எட்டை (பத்தாது தான்!) இங்க எடுத்து விடுறேன்! இப்பவே சொல்லிட்டேன், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!

1. அப்ப நான் ரெண்டாப்பு படிச்சுட்டிருந்தேன்! (ஒரு கொசுவத்தி சுருளை எடுத்து மூஞ்சிக்கு நேரா சுத்திக்கோங்க! அப்பதான் ஃபிளாஷ் பேக் எஃபக்ட் வரும்!). காஞ்சிபுரத்தில படிச்சுட்டுருந்தேன்! ஒரு தடவை ஸ்கூல்ல ஆதரவற்றோர் பள்ளிக்காக துணி எல்லாம் சேகரிச்சுட்டு இருந்தாங்க! நானும் துணி எல்லாம் கொடுத்தேன்! அடுத்த நாள் தான் துணி எல்லாம் கொண்டு போறேன்னு சொல்லிருந்தாங்க! அடுத்த நாள் ஸ்கூலுக்கு போகும்போது வழில ஒரு மஞ்சள் ரோஜா பூத்திருந்துச்சு! சரி துணிகளோட சேர்த்து இதையும் கொடுத்தா நல்லா இருக்குமேன்னு கொண்டு போய் எங்க கிளாஸ் டீச்சர்ட்ட கொடுத்தேன்!
அவிங்க என்னடான்னா நான் அதை அவங்களுக்கு தான் கொடுக்கிறேன்னு நினைச்சுட்டு “ச்ச்சோ ஸ்வீட்” னு என் கன்னத்தை கிள்ளிட்டு அதை அவங்க தலைல வெச்சுகிட்டாங்க! நானும் ஹிஹிஹி னு வழிஞ்சுகிட்டே வந்து உக்காந்துட்டேன்! அப்ப மட்டும் நான் வழிஞ்ச வழிசலை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திருப்பி விட்டுருந்தாங்கன்னா முப்போகம் விளைஞ்சிருக்கும்!

2. எங்க ஸ்கூல்ல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல போட்டி வெப்பாங்க! அதுல பேச்சுப்போட்டி, கவிதை கட்டுரைன்னு எல்லாத்துலயம் நம்ம தான் கிங்! இத நம்பி ஒரு தடவை எங்க தமிழ் மிஸ் ஒரு டிராமா போட சொல்லி கோத்துவுட்டுட்டாங்க! அப்ப நான் ஏழாவது படிச்சுட்டிருந்தேன்! நானும் என் நண்பணும் மண்டையை பிச்சுகிட்டு ரெண்டு நாள் கழிச்சு ஒரு கதை ரெடி பண்ணோம்! கதைன்னா சாதாரண கதை இல்ல! ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமா ஊழலை ஒழிக்கணும், லஞ்சத்தை அழிக்கணும்னு செம கான்செப்ட்! மேடைல கார் சேஸிங் ஸீன் எல்லாம் பிளான் பண்ணி வெச்சிருந்தோம்னா பாத்துக்கோங்க! ஸ்கிரிப்ட் எழுதி எங்க மேடம் கிட்ட கொடுத்தா அவிங்க மயக்கமே போட்டுட்டாங்க!

"தம்பிகளா நான் ஸ்டேஜ்ல போடுறதுக்கு கதை கேட்டேன்பா! நீங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை ரெடி பண்ணிருக்கீங்க?"

"அப்ப இதை போட முடியாதுங்களா மேடம்?"

"இவ்வள்வு நேரம் என்ன தெலுங்குலயா சொல்லிட்டிருந்தேன்?" ன்னு எங்க முதல் கதைக்கே ஆப்பு வெச்சுட்டாங்க! இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குன்னு கட்டபொம்மன் டிராமா போடலாம்னு முடிவு பண்ணி என்னை கட்டபொம்மனாகவும் போட்டுட்டாங்க! எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, ஒரு சில நேரம் ஓவர் ஆக்டிங் பண்ணிடுவேன்!

அதே மாதிரி தான் அன்னைக்கு ஜாக்சன் துரை கிட்ட பேசும்போது


"டேய் துரை!
யாருகிட்ட கேக்குற திறை
நாய்க்கு போடுறது பொறை
நான் அடிச்சா உன் வாய்ல வரும் நுரை"
ன்னு டிஆர் ரேஞ்சுக்கு பேசிபுட்டேன்! எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்ப்ச்சுட்டாங்க! எங்க மேடத்துக்கு செம கோபம்! எனக்கும் ஒரு மாதிரி ஆயிடுச்சு! எப்படியாவது விட்ட பேரை திரும்பி வாங்கணம்னு முடிவு பண்ணி அப்புறமா மாவட்ட சுகாதார நிர்வாகம் நடத்துன ஒரு போட்டில மலேரியாவை பத்தி ஒரு நாடகம் போட்டு கலெக்டர் கையால மேடத்தை பரிசு வாங்க வெச்சோம்!

3. +2 முடிச்ச பிறகு ஐஐடி எண்ட்ரன்ஸ்க்கு அப்ளை பண்ணிருந்தேன்! (சும்மா ஒரு டைம் பாசுக்குத்தான்). நான் வீட்டுல வெட்டியா உக்காந்திட்டிருந்ததை பாத்து டவுட் ஆகிட்டாங்க! பிரிலிம்ஸ்கு ஒரு ரெண்டு நாள் இருக்கும்போது எப்பப்ப எந்த எக்ஸாம்னு கேட்டாங்க! நானும் சொன்னேன்! அப்புறமா ஹால் டிக்கெட் வாங்கி பாத்தவுடனே கடுப்பாயிட்டாங்க! ஏன்னா நான் பிரிலிம்ஸ் எக்ஸாம்கு பதில் மெயின் எக்ஸாம் டைம்டேபிள் சொல்லிட்டேன்! "பிரிலிம்ஸ்கும் மெயின்ஸ்குமே உனக்கு வித்தியாசம் தெரியலை! நீ எல்லாம் எக்ஸாம் எழுதி என்ன சாதிக்கப்போற? பேசாம வீட்டுலய உக்காரு" ன்னுடாங்க! நானும் ஐஐடி கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு ஃபிரியா விட்டுட்டேன்!

4) ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கும்போது தமிழ்ல பேசக்கூடாதுன்னு ஒரே கெடுபிடி! அதுவும் ஒரு மேடத்துக்கு என் மேல செம காண்டு! எப்ப பாத்தாலும் தமிழ்ல பேசிட்டான்னு கோத்து விட்டுடும்! பழி வாங்கறதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ ஒரு சான்ஸ் கிடைச்சுது! எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே அப்ப நாங்க தான் போய் சின்ன பசங்களுக்கு கிளாஸ் எடுக்கணும். இது தான் சான்ஸ்னு அந்த மேடம் கிளாஸுக்கு போனேன்! அங்க ஒரு பையனை எழுப்பி பா பா பிளாக் ஷீப் பாட்டு பாட சொன்னேன்! அவனும் எழுந்து சொன்னான்! இனிமே அப்படி சொல்லக்கூடாதுன்னு தமிழ்ல சொல்லி குடுத்துட்டேன்! தமிழ்ல எப்படின்னா

"செம்றி ஆடே செம்றி ஆடே கம்ப்ளி கீதா?
கீது மச்சி கீது மச்சி மூணு மூட்டை"
னு செம லோக்கலா இருக்கும்! நான் சொல்லி கொடுத்து முடிச்சவுடனே கரெக்டா அந்த மேடம் உள்ளே வந்துட்டாங்க! அப்புறம் என்ன? எப்பவும் போலவே அர்ச்சனை தான்!

5) ஒரு தடவை நானும் என் பிரண்ட்ஸும் வீட்டுகு வெளில நிந்து பேசிக்கிட்டிருந்தோம்! அப்ப பாத்து எங்க டியூஷன்ல படிக்கிற பொண்ணுங்க போனாங்க! நான் பாட்டுக்கு சும்மா இல்லாம பிரெண்டோட வண்டியை எடுத்துகிட்டு செம ஸ்பீட்ல ஒவர் டேக் பண்ணி டக்குனு அடுத்த தெருவுல கட் பண்ணேன்! அப்பன்னு பாத்து எவனோ படுபாவி ஒரு செங்கலை போட்டு வெச்சிருந்திருக்கான்! டமால்னு கீழே விழுந்ததோட இல்லாம வண்டியும் கரெக்டா என் மேலயே விழுந்துடுச்சு! நல்ல வேளையா அந்த பொண்னுங்க வேற வழில போய்ட்டதால இந்த கூத்தை பாக்கலை! நானும் மீசைல மண் ஒட்டாத வரைக்கும் சந்தோஷம்னு அப்படியே திரும்பி வந்துட்டேன்!

6) நாட்டு நலப்பணித்திட்டத்தில நிறைய கேம்ப் அட்டெண்ட் பண்ணிருக்கேன்! ஒரு தடவை வீடு வீடா போய் பிரச்சாரம் பண்ண சொன்னாங்க! நாங்களும் சரின்னு போய் பண்ணிட்டிருந்தோம்! ஒரு வீட்ல வயசான அம்மா ஒருத்தங்க இருந்தாங்க! அவிங்க கிட்ட போய் "பாட்டி நாங்க நாட்டு நலப்பணித் திட்டதில இருந்து வரோம்" னு சொன்னது தான் தாமதம், அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க! பாவம் அவிங்க யார் மேல என்ன கொலை வெறில இருந்தாங்களோ? விட்டா போதும்னு அடிச்சு ஓடி வந்துட்டோம்!

7) கேம்ப்ல சும்மா சுத்திகிட்டிருக்கும்போது என் பிரெண்டஸ் எல்லாம் அங்க இருக்கிற சின்ன பசங்களை கூப்பிட்டு என்னை காமிச்சு "அண்ணன் நல்லவரு! வல்லவரு! நாளும் தெரிஞ்சவரு"ன்னு சொல்ற மாதிரி பக்காவா டிரெயினிங் கொடுத்துட்டாங்க! சரி நம்மளை பத்தி பெருமையாத்தானே பேசுறாங்கன்னு நானும் கண்டுக்காம விட்டுட்டேன்! 'தீப்பொறி தினேஷ்'னு பட்டம் வேற கொடுத்துட்டாங்க! ஒரு நாள் பட்டி மன்றம் பேச என்னை கூப்பிட்டு இருந்தாங்க! அந்த ஊரே கூடி இருந்தது! மைக் முன்னாடி நிந்தவுடனே அங்க இருந்த பசங்க எல்லாம் கோரஸா "அண்ணன் நல்லவரு! வல்லவரு! நாளும் தெரிஞ்சவரு! அண்ணன் தீப்பொறி தினேஷ் வாழ்க!"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டானுக! அடப்பாவிகளா இதுக்கு தான் இவ்வளவு டிரெயினிங்கா? ஊரே சிரிச்சுட்டிருந்துது! இருந்தாலும் "உங்கள் பேராதரவுக்கு நன்றி" ன்னு சமாளிச்சு ஒரு வழியா பேசி முடிச்சுட்டேன்!
8) பட்டி மன்றத்துல எப்பவும் முதல்ல பேசறவுங்க பாடு ரொம்ப திண்டாட்டம்! எல்லாமே சொந்த கருத்தா சொல்லனும்! அந்த பட்டி மன்றத்துல நான் தான் முதல்ல பேசணும்! எனக்கு அப்புறம் பேசுன யாருமே எதுவும் தயார் பண்ணலை போலிருக்கு! பொண்ணுங்க முதற்கொண்டு எல்லாரும் நான் பேசுனதை வைச்சு என்னை காய்ச்சி எடுத்துட்டாங்க! பட்டிமன்றம் முடிச்சு கீழே வந்தவுடனே ஒரு பையன் வந்து "திப்பொறி அண்ணா! பட்டி மன்றத்துல ஏன் எல்லாரும் உங்களையே கிழிச்சாங்க"ன்னு கேட்டான்! எல்லாரும் வுழுந்து வுழுந்து சிரிச்சிட்டாங்க! ஒரு வழியா சமாளிச்சிட்டு வந்துட்டேன்!


இதோட என் எட்டு பதிவை நிறைவு செய்திக்கிறேன்! இதுனால நான் சொல்லிகிறது என்னன்னா, தொபுகடீர்னு கீழே விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டலைன்னு சந்தோஷமா கிளம்பி போய்ட்டே இருங்க!

வர்ட்டா?

Thursday, June 28, 2007

ஊர்களும் அதன் பெயர்களும்!

அன்பார்ந்த நண்பர்களே!! இந்த வலைப்பதிவைத் தொடங்கும்முன் உங்கள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை! இப்பதிவை நான் முழுவதும் தூய தமிழில் எழுதலாமென்று முடிவு செய்துள்ளேன்! ஆகையால் பலவீனமான இதயம் உடையோர் மேற்கொண்டு படிப்பதைப்பற்றி நன்கு யோசித்து செயல்படுங்கள்! பதிவுக்கு செல்வோமா?

நான் படிப்பது இயந்திரவியல் எனினும், வரலாற்றின் மேல் எனக்கு அளவு கடந்த காதல் உண்டு! (வரலாறு பாடத்தின் மேல்! ‘வரலாறு’ படத்தின் மேல் அல்ல!) வியப்பூட்டும் செய்திகள் வரலாற்றில் பல இருப்பினும், இன்று நாம் வசித்து கொண்டிருக்கும் ஊர்களுக்கு பெயர்கள் எப்படி வந்தன என்று பார்த்தோமானால், அவற்றின் பின் உள்ள கதைகளும், நிகழ்வுகளும் மிகவும் சுவாரசியமானவை! ஏதோ எனக்குத் தெரிந்த மட்டில் சில ஊர்களைப்பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

சென்னை:

தமிழகத்தின் தற்போதைய தலைநகருக்கு சென்னை என்று பெயர் ஏற்பட்டது, ஆங்கிலேயர் காலத்தில்! அக்காலத்தில் நம் நாட்டையும் அதன் வளங்களையும் பங்கு போட்டு கொள்வதில் ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கடும் போட்டி இருந்தன! அப்போதைய மதராஸ் ராஜதானி இருந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்தபொழுது போர்த்துகீசியர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒரு கோட்டை கட்ட வேண்டுமென்று முடிவு செய்தனர்!

கோட்டைக்கு நிலம் தேடிக்கொண்டிருந்த பொழுது இப்போது கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தினருகே கோட்டையை அமைத்தால் உள்நாட்டு வாணிபத்துக்கும் கடல் வாணிபத்துக்கும் உதவியாக இருக்குமென்று எண்ணினர். அப்போது சென்னை இருந்த இடம், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு நிலச்சுவான்தாரிடம் இருந்தது. அவரும் ஆங்கிலேயர்களுக்கு தம் நிலத்தை அளிக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்! ஆனால் புதிதாக உருவாகும் அவ்விடத்துக்கு தம் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை சூட்ட வேண்டும் என்று விழைந்தார்.

அதன் பெயரிலே அவ்விடத்துக்கு சென்னை என்று பெயர் வழங்கப்பட்டது! ஆங்கிலேயர்கள் அன்று கட்டிய கோட்டைதான் இன்று பல அரசியல்வாதிகள் உள்ளே நுழைவதற்கு பகீரதப்பிராயத்தனம் செய்து கொண்டிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை!!

வீராணம் ஏரி:

சென்னையைப்பற்றி பார்த்தோம்! சென்னையின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியைப்பற்றிப் பார்ப்போம். வீரநாராயணபுரம் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என்றாயிற்று. இப்போதய கடலூர் மாவட்டத்தில் இருக்கும் இவ்வேரி சோழர் காலத்தில் எடுப்பிக்கப் பட்டது. ‘பொற்கூரை வேய்ந்த தேவர்’ என்றழைக்கப்படும் பராந்தக சோழர் இவ்வேரியை தூர் வாரி கரை எழுப்பினார்.

அப்பொழுதைய கால்த்தில் இவ்வேரி அமைந்த இடம், பாரேழு வள்ளல்களில் ஒருவரான ‘வல்வில் ஓரி’யின் வழி வந்த கடம்பூர் சிற்றரசுக்கு அருகில் இருந்தது. வழி வழியாக சோழ குலத்துக்கு தோள் கொடுத்த கடம்பூர் சிற்றரசின் மக்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டே பராந்தகச்சோழர் இவ்வேரியை ஏற்படுத்தினார்.

கோயம்புத்தூர்:

முன்னொரு காலத்தில் கோவன் என்ற கொங்கு நாட்டை சேர்ந்த சிற்றரசன் புதூர் எனும் பகுதியை ஆண்டு வந்தான். ‘கோவன் ஆண்ட புதூர்’ என்பதே காலப்போக்கில் மருவி கோயம்பத்தூர் என்றாயிற்று.


திருநெல்வேலி:

தாமிரபரணி ஆற்றினாலேயே திருநெல்வேலிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது. இப்பொழுது மிகவும் சிறியதாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன! அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருநெல்வேலி இப்பொழுது இருந்த இடத்தில் நெல் பரவலாக பயிரிடப்பட்டிருந்தது. தாமிரபரணி நதியானது, நெல்லை வழியாக பாயும்பொழுது, பாசனத்துக்கு தண்ணீர் அளித்ததோடில்லாமல் ஆற்றின் கரைகளையும் பலப்படுத்திக்கொண்டே சென்றது! ஆகையால் எத்தகைய வெள்ளமும் அச்சீமையில் விளைந்திருக்கும் நெல்லை ஒன்றும் செய்ய முடியவில்லை. நெல்லுக்கு வேலியாய் இருப்பதினால் நெல்வேலி என்றும், அருள்மிகு நெல்லையப்பர் எழுந்தருளியுள்ளதனால் திரு என்ற அடையுடன் திருநெல்வேலி என்றும் பெயர் பெற்றது!

என் இன்னொரு நண்பர் கூறியதாவது:

ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன், நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பேர் வந்ததாக இருந்த்து.

எது உண்மை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :)

தஞ்சை பெரிய கோயில்:

பொன்னியின் செல்வன் எனப்படும் இராஜ இராஜ சோழன் எழுப்பிய கோயில் இப்பெரிய கோவில் ஆகும். பொன்னியின் செலவர் வாலிபராய் இருந்தபொழுது அவருடைய தந்தை சுந்தரசோழர் ஆட்சி புரிந்தார். அப்பொழுது பாண்டியனுக்கு உதவி செய்த இலங்கை அரசன் மகிந்தனை அடியோடு அழிக்கும் பொருட்டு இலங்கை சென்றிருந்தார். அங்கே மகிந்தனின் படைகளை துரத்தி ‘ஈழங்கொண்ட வீரர்’ என்ற பட்டத்தையும் பெற்றார். ஓடி ஒளிந்த மகிந்தனை தேடி சிலகாலம் இலங்கையில் தங்க நேர்ந்த பொழுது அங்கு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருந்த புத்த சிலைகளை கண்டு வியப்புற்றார். பிற்பாடு தான் சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு, உலகமே வியக்கும்படி தமிழகத்தில் இத்தைகைய விண்ணுயர சிவாலயங்களை எழுப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். அதன் பெயரிலேயே சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தார்.இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை எனும் ஊர், சென்னையிலிருந்து 112 km தூரத்தில் உள்ளது! தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடம் என்று கூறும் அளவிற்கு தோல் தொழிற்சாலைகளால் நிரம்பியுள்ளது! இராணிப்பேட்டைக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று பார்த்தோமானால், ஆங்கிலேய பிரபு ஒருவரும் அவர் துணைவியும் அலுவல் நிமித்தமாக ராணிப்பேட்டையில் தங்கியிருந்தனர்! ஆங்கிலேயரின் துணைவியாருக்கு இந்திய கலாச்சாரத்தின் மேல் அளவு கடந்த பற்று! அப்பொழுது உடன் கட்டை ஏறுதல் தமிழ் கலாசாரத்தில் மிக்க பரவலாக காணப்பட்டது!

அதே போல் அப்பிரபு உயிர்துறந்தபின் ஆங்கிலேய ராணி, தமிழ் பெண்களைப்போலவே உடன்கட்டை ஏறி தம் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் தியாகத்தினாலேயே ராணிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது!

நண்பர்களே! ஏதோ எனக்கு தெரிந்த வரையில் சில ஊர்களைப்பற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கும் இதைப்பற்றி தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். கண்டிப்பாக பதிவில் ஏற்றி விடுகிறேன்!

அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்வரை விடை பெறுகிறேன்!

வணக்கம்!!

Friday, June 22, 2007

பயணக்குறிப்புகள் :)

முதல் மொக்கைக்கப்புறம் என்ன எழுதறதுன்னு முழிச்சிட்டுருந்தப்ப சமீபத்துல வாங்கின பல்பைப்பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன்! இது ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்தது! நான் பாட்டுக்கு லீவுன்னாலும் வீட்டுக்கு போகாம நல்லப்பிள்ளையா காலேஜ்லயே படிச்சுட்டு (ஹி ஹி ஹி) இருந்தேன்! இருந்தாலும் place ஆனபிறகு வீட்டுக்கே போகலைன்னு ஒரு ஃபீலிங். எங்க வீடு இருக்கறது மதுராந்தகத்துல! (செங்கல்பட்டு பக்கம்). நான் படிக்கறது கோவைல! வீட்டுக்கு போகணும்னா சென்னை போற பேருந்துல ஏறி நடுவுல இறங்கணும். நம்ம அரசுப்பேருந்து கண்டக்டருங்க இருக்காங்களே! அவங்களுக்கு ஏதோ ஃபிளைட்ல கண்டக்டரா இருக்கறதா நினைப்பு! சீட் இருக்கான்னு தப்பித்தவறி கேட்டுட்டா போதும், ஏதோ பிச்சை கேட்ட மாதிரி பாப்பானுங்க! எவ்வளவோ முயற்சி பண்ணியும் எவனும் ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க! நான் வேற சும்மா இல்லாம என் கூட இன்னொருத்தனையும் கூட்டிட்டு வந்துட்டேன்! “பஸ் கிடைக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? வாடா பாத்துக்கலாம்னு!” கூட்டிட்டு வந்தேன்! அவன் வேற கொலை வெறியோட பாத்துட்டு இருந்தான்!


அப்புறம் தட்டுத்தடுமாறி ஒரு தனியார் பேருந்துல இடம் கிடைச்சுது! ஆனா டிக்கெட் 375 ரூபாய்! வேற வழி இல்லாம வெயிட் பண்ணிட்டுருந்தோம்! அங்க எக்கச்சக்கமான சிட்டுக்குருவிங்க :) இருந்ததால ஏதோ நேரம் போனதே தெரியலை! ஆகா நம்ம பஸ்ல தான் வருவாங்கன்னு ஒரு நப்பாசையோட இருந்தேன்! ஆனா அங்கதான் விதி ஒரு பெரிய சதி செஞ்சுடுச்சு! திடீர்னு ஒரு பஸ் வந்தவுடனே எல்லாரும் ஏற ஆரம்பிச்சாங்க! சரி நாமும் ஏறலாம்னு எழுந்தேன்! அப்பத்தான் கூட வந்த நண்பன் சொன்னான்

“அது எர்ணாகுளம் போற வண்டிடா!”

“அதனால என்ன! நாம எர்ணாகுளம் போயிட்டு சென்னை போலாமே?”
“நான் ஏதாவது அசிங்கமா திட்டுறதுக்குள்ள வந்து உக்காந்துடு!”

நானும் பேசாம வந்து உக்காந்துட்டேன்! அப்பத்தான் பக்கத்துல ஒரு பிரகஸ்பதி பேசிட்டு இருந்தாரு “இந்த டிபார்டெட் படத்துல என்ன இருக்குன்னு அதுக்கு போய் நோபல் பரிசு கொடுத்தாங்க? பேசாம வேற ஏதாவது படத்துக்கு கொடுத்திருக்கலாம் சார்!” அடப்பாவிங்களா! சினிமாவுக்கெல்லாம் எப்படா நோபல் பரிசு கொடுக்க ஆரம்பிச்சாங்க? உங்க அலம்பலுக்கு ஒரு அளவே இல்லையாடா? இந்த மாதிரி ஆளுங்களோட என்ன பிரச்னைனா, இவிங்க பேசிக்கறதோட இல்லாம அக்கம்பக்கத்துல எவனாவது இருந்தான்னா அவனையும் உள்ள இழுப்பானுங்க! அதே மாதிரி இந்த ஆளும் சொல்லி முடிச்சுட்டு என்னைப்பார்த்து “என்ன தம்பி? நான் சொல்றது சரிதானே?” ன்னு கேட்டாரு. “நான் வேணும்னா அடுத்த தடவை கொடுக்கறத்துக்கு முன்னாடி உங்களை கேக்காம கொடுக்க வேணாம்னு சொல்லட்டுங்களாண்ணா?” ன்னு சொல்லலாம்னுதான் நினைச்சேன்! ஆனா உயிரோட ஊர் போய் சேரணும்ன்ற ஒரே காரணத்துக்காக பேசாம இருந்துட்டேன்! இப்படியே வெயிட் பண்ணிட்டுருந்தப்ப ஒரு வழியா நாங்க ஏற வேண்டிய வண்டி வந்துச்சு. வண்டி வேற பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்துச்சு! சரின்னு நானும் என் கூட வந்தவனும் ஏறுனோம்


ஏறி உக்காந்தா எனக்கும் அவனுக்கும் வேற வேற இடத்துல சீட்! எனக்கு பக்கத்துல காட்டெருமை மாதிரி ஒருத்தன் வந்து உக்காந்தான்! எப்படியும் ஒரு 120 கிலோ இருப்பான்! அவன் தொபுகடீர்னு வந்து உக்காந்ததுல நான் கிட்டத்தட்ட கொஞ்ச தூரம் மேல பறந்துட்டேன்! ஒரு ஸீ ஸாவுல நீங்க ஒரு பக்கம் உக்காந்திருக்கும்போது இன்னொரு பக்கத்துல திடீர்னு ஒரு பாராங்கல்லை தூக்கி போட்டா எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருந்துச்சு! இதுல என்னை பாத்து
“தம்பி கொஞ்சம் தள்ளி உக்காருங்கன்னு” சொன்னான்!
“ஏங்க இதுக்கு மேல தள்ளி உக்காந்தா ஜன்னல் வழியா தொங்கிட்டு தாங்க வரணும்!”
இதுக்கு மேல விட்டு வைச்சா பிரச்னை ஆயிடும்னு பஸ்ல இருந்தவர்ட்ட சொல்லி என் நண்பனையே பக்கத்துல உக்கார வைச்சுகிட்டேன்! ஒரு வழியா வண்டி புறப்பட்டுச்சு.

ஆனா திடீர்னு வண்டி சென்னை போக வேண்டிய திசைக்கு எதிர் திசைல கேரளாவ நோக்கி போக ஆரம்பிச்சுடுச்சு! ஆகா சோலியை முடிச்சுட்டாங்கடான்னு யோசிச்சுட்டுருக்கும்போதே வண்டி ஒரு கிமீ போய் ரிவர்ஸ் எடுத்துச்சு! அடப்பாவிங்களா! ரிவர்ஸ் எடுக்கறதுக்கு இப்படி ஒரு அளப்பறையா? ஆரம்பமே அட்டகாசமா இருக்கே! நாளைக்கு ஊர் போய் சேர்ந்த மாதிரி தான்னு யோசிச்சிட்டுருந்தப்பவே திடீர்னு வண்டியை தாறுமாறா ஒட்ட ஆரம்பிச்சுட்டான்! நாளைக்கு உயிரோட ஊர் போய் சேர்ந்தா போதும்னு கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு படுத்துட்டேன்! புஷ் பேக் ஸீட்டை புஷ் பண்ணலாம்னு பண்ணா பின்னாடி இருக்கறவரு “தம்பி! தம்பி! என்ன பண்றீங்க? இப்படியெல்லாம் ஸீட்டை உடைக்காதீங்க!” ன்னாரு. “அங்கிள்! நான் இந்த பஸ்ல வந்ததுக்கு ஒரே காரணம் இந்த புஷ் பேக் தாங்க! அதுக்கும் ஆப்பு வச்சிடாதீங்க! வேணும்னா உங்களுக்கும் செஞ்சு தரேன்” னு சொல்லி எழுந்து போய் அவருக்கும் புஷ் பண்னி தந்துட்டு வந்து படுத்தேன்! எப்படியும் காலைல ஒரு 6 மணிக்கெல்லாம் போயிடுவான்னு படுத்துட்டேன்!

இங்க தான் விதி ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுடுச்சு. கோவைல இருந்து சென்னைக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்கு! பெரும்பாலான வண்டிங்க சேலம், விழுப்புரம் வழியா சென்னை போகும்! கார்ல போறவங்கெல்லாம் ஓமலூர், வேலூர் வழியா சென்னை போவாங்க! பஸ்லாம் எப்பவும் முதல் ரூட் வழியா போகும். அப்படி போகும்போது மேல்மருவத்தூர் தாண்டி மதுராந்தகத்துல இறங்கிடலாம்.

நானும் அந்த வழியாதான் போவான்னு நம்பி உக்காந்துட்டேன். காலைல எழுந்திருக்கும்போது மணி ஆறு! அரக்க பரக்க சுத்தி முத்தி பேந்த பேந்த முழிச்சுகிட்டே எங்க இருக்கோம்னு பாத்தா ஒண்ணுமே விளங்கல! ஒரு வேளை தாம்பரம் தாண்டி போயிருப்பான்னோனு டிரைவர் கிட்ட போய் கேட்டா இப்பதாங்க வேலூர் வந்துருக்குன்னு சொன்னான்! தலைல இடி விழுந்த மாதிரி இருந்தது! இப்ப எங்க வூட்டுக்கு போகணும்னா நடுவுல இறங்கி ஒரு 3 மணி நேரம் பயணம் பண்ணணும்! வேற வழியில்லாம நொந்து நூடுல்ஸா போய் நடுவுல இறங்கி 3 பஸ் மாறி 11 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன்!

இந்த மேட்டரை வீட்டுல சொன்னா கெத்துக்கு குறைச்சல் வந்துடும்னு வண்டி பஞ்சர் அப்படி இப்படின்னு சமாளிச்சு ஒரு வழியா மேட்டர இத்தோட க்ளோஸ் பண்ணிட்டேன்!

இதுனால எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, எப்ப வண்டி ஏறுனாலும் ரூட் விசாரிச்சுட்டு ஏறுங்க! அப்படியே இப்படி ஏதாவது பல்பு வாங்க நேர்ந்தாலும் கெத்தா தோள்ல இருக்க தூசியை துடைச்சிட்டு அப்படியே கெத்தை மெயிண்டைன் பண்ணிங்கங்க!

என்ன இருந்தாலும் ஆம்பிளைக்கு கெத்து தான சொத்து!!

வர்ட்டா!!

Thursday, June 14, 2007

முதல் மொக்கை!!

எதையும் துவங்கும்முன் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் கோடானு கோடி நன்றிகள்!!! என் முதல் பதிவுக்கு வருகை தந்துள்ள நல்ல உள்ளங்களே! வருக வருக!! என்னதான் இங்கிலீசுலயே பீட்டர் விட்டு கதையா கதையா எழுதுனாலும் நம்ம தமிழ்ல எழுதற மாதிரி வருமா? அதான்! எப்படியாவது ஒரு தமிழ் பதிவு ஆரம்பிச்சுடனும்னு பகீரத பிராயத்தனம் பண்ணி, சீவீஆர் அண்ணணை படாத பாடு படுத்தி, ஒரு வழியா இங்க வந்து நிக்கறேன்! நான் இதை ஆரம்பிச்சது எதுக்குனா, வெட்டி மாங்கா போடறுதுக்கோ, வியாக்கியானம் பேசறதுக்கோ மட்டுமில்லை. அப்பப்ப என் மனசுல தோன்ற சிந்தைனங்கள உங்களோட பகிர்ந்துக்கறுத்துக்காகவும்தான். அதனால படிச்சவுடனே மறக்காம பின்னூட்டம் கொடுத்துட்டு போங்க!! மத்தபடி என்ன பத்தி சில வார்த்தைகள்!!

பேயர்: சிடிகே (எ) ச.தினேஷ் குமார்
வயது: இன்னும் யூத்து தான்!
பிடித்த சில வாக்கியங்கள்:

“தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!”

“கெத்து தான் ஆம்பிளைக்கு சொத்து!!”

காதலைப்பற்றி:

“நேற்று நீ சிரித்தாய்! இன்று அவள் சிரிப்பாள்! நாளை ஊரே சிரிக்கும்! ”

“காதல்ன்றது மழைல நனையற மாதிரி! நனையும்போது சந்தோஷம்! நனைஞ்ச பின்னாடி ஜலதோஷம்!!”

“காதல்ல விழுறதும் சேத்துல விழறதும் ஒண்ணுதான்! சேத்துல விழுந்தா டிரெஸ் காலி! காதல்ல விழுந்தா பர்ஸ் காலி!” (லவ் பண்றதுக்கு பொண்ணு கிடைக்க்லைன்னா இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான்!)

மத்தபடி எழுதறுத்துக்கு மானாவரியா மேட்டர் இருக்குது! அடுத்த பதிவுல சந்திக்கிறேன்!! வரட்டுமா!!!