Friday, January 18, 2008

பயணக்குறிப்புகள் – பாகம் 2

இஸ்கூல் படிக்கும்போது பசங்க எல்லாம் சேர்ந்து நிறைய ஊர் மேய்ஞ்சுருக்கோம்! ஊர் மேய்ஞ்சு ரொம்ப நாள் ஆச்சுன்னு ஃபீல் பண்ணிட்டிருந்தப்போ திடீர்னு ஒரு சான்ஸ் கிடைக்க, ஜூட் விட்டேன்! அதான் இந்த பயணக்குறிப்புகள் பாகம் 2!!

தமிழ்நாட்டுல செய்யூர், சூனாம்பேடுன்னு ஊருங்க இருக்கிறது நிறைய பேருக்கு தெரியாது! (எனக்கே போன பிறகு தான் தெரிஞ்சுதுன்றது வேற விஷயம்!) கிழக்கு கடற்கரை சாலையில காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் மரக்காணத்துக்கு பக்கத்துல கொஞ்சம் உள்வாங்குன ஊர் தான் ஆலம்பாறை! இங்க ஒரு சிதிலடைஞ்ச கோட்டை இருக்கு! நமக்கு தான் வரலாறுன்னா ரொம்ப பிடிக்குமே! அதான் அந்த இடத்தை தேடிக் கண்டுபிடிச்சு போய் சேர்ந்தேன்! தமிழ்நாடு தொல்பொருள் கழகத்தோட கட்டுப்பாட்டுல இருக்கிறதால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமா பராமரிச்சிருந்தாங்க! சொல்லப்போனா ஒரு போர்டு வெச்சதோட அந்த பக்கமே எட்டிப்பாக்கலைன்னு நினைக்கிறேன்!!


இந்த கோட்டையின் வரலாறு:

கி.பி 1735 ஆம் ஆண்டு, நவாப் தோஸ்த் அலிகான் இந்த கோட்டையை ஆண்டு கொண்டிருந்தார்! கி.பி 1750 இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய ஃபிரெஞ்சு தளபதி ட்யூப்ளக்ஸுக்கு இந்த கோட்டையை அப்போதைய நவாப் சுபேதார் முசாஃபர்ஜங் பரிசளித்தார்! பின்னர் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் அதை சேதப்படுத்தினர். அதற்கேற்ப இப்பொழுது அக்கோட்டையில் வெறும் இடிபாடுகளே உள்ளன!

இப்பொழுது மீண்டும் கோட்டைக்கு செல்வோம்! கோட்டையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது கூடவே அந்த ஊர் சிறுவன் ஒருவன் இருந்தான். ஒரு இடத்தில் மிகவும் பாழடைந்த பகுதியின் உள்ளே சென்று பார்த்துட்டு திரும்பும்போது, அந்த பையன், “உள்ளே எப்பவும் நரியெல்லாம் இருக்குமே அண்ணா! நேத்து கூட பெரிய்ய பாம்பு ஒண்ணு அடிச்சாங்களே? நீங்க எதுவும் பார்க்கலையா அண்ணா” என்றான்!!! ஏண்டா? எத்தனை பேருடா இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க? உள்ளே போற வரைக்கும் என்னடா பண்ணிட்டிருந்தே? போய்ட்டு வந்த பிறகு சொல்ற?


அதுக்கப்புறம் ஆராய்ச்சி பண்றத்துக்கு மூட் இல்லாததால (பயம் எல்லாம் ஒண்ணுமில்லை! :) ) அப்படியே கடல் பக்கமா போனேன்! கடலுக்கும் கோட்டைக்கும் ஒரு 50 மீட்டர் தொலைவு கூட இருக்காது!! அதுக்கப்புறம் கடல்ல மோட்டார் படகுல ஒரு ரவுண்ட் போனேன்!!


அது என்ன்ன்னு தெரியல! தண்ணியை பார்த்தாலே (எல்லா தண்ணியையும் சேர்த்துதான் சொல்றேன்) மனுஷனுக்கு குதூகலம் பிச்சிகிட்டு வருது! அதுவும் அப்படி ஒரு மோட்டார் படகு சவாரி அட்டகாசமா இருந்தது!! அலை வரும்போது அதை எதிர்த்து படகு போகும்! அப்ப அலை மேல படகு போற ஒரு சில நொடி வானத்துல பறக்குற மாதிரியே இருக்கும்! பின்னாடி அலையில இருந்து கீழே இறங்கும்போது அதலபாதாளத்துல விழுற மாதிரியே இருக்கும்!



இப்படியே ஒரு அரை மணி நேரத்துக்கு ஆனந்தமா பயணம் செஞ்சு முடிச்சபிறகு கிளம்பலாம்னு தோணிச்சு! கிளம்புறதுக்கு முன்னாடி ஊர்க்காரங்க நிறைய பேரு வந்துட்டாங்க! இளநீர் எல்லாம் வெட்டி கொடுத்து சரியான உபசரிப்பு தான் போங்க! சுனாமியால எல்லாத்தையும் இழந்துட்டு இப்பதான் மெல்ல வாழ்க்கையை திரும்பி இயல்பாக்கிட்டு வந்துட்டிருந்தாலும் பண்பாடு, விருந்தோம்பல் – இது எதையும் மறக்காம இருக்கிற இவங்க கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டியது இன்னும் ஏராளம்!!
மதிய உணவை ஈ.சீ.ஆர் தாபாவுல முடிச்சுட்டு தக்ஷின சித்ராவுக்கு போனேன்!
பண்டைய தென்னிந்திய கலாசாரத்தை எந்த ஒரு குறையும் இல்லாம அப்படியே நம்ம கண் முன்னாடி காட்டியிருக்காங்க! தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களில் எழுத்துக்களின் வளர்ச்சி, வீடு கட்டிய முறை ஆகியவை தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன! அதிலும் தமிழகத்தில் பண்டைய குயவர், கொல்லர், அந்தணர், ஆடை நெய்பவர் ஆகியோரின் வீடுகள் குறிப்பிடத்தக்கவை!




இது மட்டுமன்றி இடையே மயிலாட்டம், கரகாட்டம் போன்ற சிறப்புகளும் உண்டு!!
இனி கிழக்கு கடற்கரை வழியாக நீங்கள் செல்ல நேர்ந்தால் மறக்காமல் இந்த இடங்களை பார்த்து விட்டு செல்லுங்கள்!

அடுத்த பதிவு: நான் இதுவரை ரசித்து ருசித்த உணவு மற்றும் உணவகங்கள் பற்றி!!

Saturday, August 25, 2007

பீட்டர் விட்டு ஆப்பு வாங்குனவங்க!!

நாட்டுல இவிங்க மாதிரியே நிறைய பேரு சுத்துறாங்கப்பா! மனசுல பெரிய எமினம்னு நினைப்பு!!

Friday, August 24, 2007

டி ஆர் இன் காதல் கவிதை!!



நம்ம விஜய டி ஆர் த்ரிஷா கிட்ட காதலை சொன்னார்னா எப்படி இருக்கும்ன்ற ஒரு விபரீத கற்பனை!

அன்பே த்ரிஷா,
நீ தான் என் மோனாலிசா

இழுக்க இழுக்க வர்றது ஜவ்வு!
நான் உன்னை தாறுமாறா பண்ணுறேண்டி லவ்வு!

ரவையை வெச்சு கிண்டுறது உப்புமா!
நீ என்னை கண்டுக்காம இருக்குறது ரொம்ப தப்புமா!

முட்டையை உடைச்சா போடுறது ஆம்லேட்டு
என்னைப் புரிஞ்சுக்கிறதுல எப்பவுமே நீ லேட்டு!

சின்ன பசங்க ஆடுறது கோலி
உங்கப்பன் என்னை பார்த்தான்னா நான் காலி!

ஆற்காட்டில ஃபேமஸ் பிரியாணி
நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் மண்டைல நான் அடிப்பேன் பெரிய ஆணி

டி ஆர் னு சொன்னா ஞாபகம் வர்றது தாடி!
நீ கண்டிப்பா வருவ என்னைத்தேடி!

ஆக மொத்தம் நீ தான் என் டிஸ்னி வேர்ல்டு!
நம்ம காதலுக்கு உங்கப்பன் தான் ஆக்ஸா பிளேடு!!

இதுக்கு நம்ம திரிஷா ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி கமெண்டிட்டு போங்க!!



இது என் பதிவை கஷ்டப்பட்டு படிச்சதுக்காக போனஸ்!! :)

போடுங்கப்பா வோட்டு!!

Thursday, August 9, 2007

கூவம் நதிக்கரையிலே

கடைசியா பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! உருப்படியா ஒரு பதிவு போட்டா என்னன்னு ஒரு எண்ணம்! மறுபடியும் வரலாறு பத்தியே எழுதலாம்னு முடிவு பண்ணி எதை பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டுருந்தப்ப சென்னை பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன். சென்னைன்னு சொன்னவுடனே நம்ம ஞாபகத்துக்கு வர்றது கூவம் தானே!

இதுக்கு மேல ஒரு நதியை அழுக்காக்க முடியாதுன்றதுக்கு சிறந்த உதாரணம் கூவம்! கூவத்தோட வரலாற்றைப் பாத்தோம்னா “எப்படி இருந்த கூவம் இப்படி ஆகிடுச்சுன்னு” கண்டிப்பா வருத்தப்படாம இருக்க மாட்டோம்! இப்ப அது இருக்கற நிலைமையிலே நதிக்குள்ள தான் குதிக்க முடியாது! அதோட வரலாறுலயாவது குதிப்போம் வாங்க!

கூவத்தைப் பத்தி வரலாற்றுக்குறிப்புகள் ஏராளமாக குவிந்து கிடக்குது! 1640 ஆம் ஆண்டு கிளைவ் டே எனும் ஆங்கிலேயத் தளபதியின் கீழ் வந்த வர்த்தகக் குழுவினர் முதன் முதலாக தரையிறங்கிய இடம் கூவம் நதிக்கரைலதான்! வெளி வாணிபத்துக்கு கடல் வழியாகவும், உள் வாணிபத்துக்கு நதி வழியாகவும் பயணம் செய்ய சுலபமா இருக்கும்ன்றத்துக்காக அவங்க தேர்ந்தெடுத்த இடம் கூவம். அவங்க வாணிபத்துக்காக கட்டின கோட்டை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. இதை பத்தி விரிவா இன்னொரு பதிவுல எழுதியிருக்கேன்.

அப்ப கூவம் நதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்துல ஓடிட்டிருந்துதாம். பின்னாடி கோட்டை விரிவாக்கத்துக்காக அதோட ஒடுபாதையை மாத்தி புதுசா கால்வாய் வெட்டினாங்க! அப்ப ஆரம்பிச்சதுதான்! இன்னிக்கு வரைக்கும் கூவத்துக்கு தொடர்ந்து ஆப்பு வெச்சுகிட்டேதான் இருக்காங்க!

கூவம் ஏன் இப்படி ஆச்சுன்னு பாத்தா ஒரு விநோதமான வேற்றுமை கிடைக்கும்! சென்னையில இருந்து 70 கிமீ தள்ளி கூவம்ன்ற பேர்ல ஒரு கிராமம் இருக்காம். தொடர்ச்சியா 75 குளம் இருக்குற இந்த கிராமத்துல இருக்கிற ஒரு ஏரி தான் கூவத்துக்கு பிறந்த இடம் என்கிறார்கள். முன்னாடி கூவம் நல்லா சீரும் சிறப்புமா ஓடி சென்னையோட தண்ணீர் தாகத்தை தீர்த்துட்டு இருந்துச்சாம்.

ஒரு காலத்துல சென்னையோட தண்ணீர் தேவையை தீர்க்கிறத்துக்காக கூவத்துக்கு நடுவுல கேசவரம்னு ஒரு அணையை கட்டி அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு எடுத்திட்டு போயிட்டாங்க. சுற்று சூழல் கெட்டு போகாம இருக்கிறத்துக்காக ஒவ்வொரு நதியிலையும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஓடுணம்னு ஒரு சட்டமே இருக்கு. அதை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம இப்படி திருப்பி விட்டது தான் கூவத்துக்கு ஒரு பெரிய ஆப்பா அமைஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க!

பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் திரு பச்சையப்பன் முதலியார் வாழ்க்கையைப்பத்தின ஆவணங்கள்ல கூவம் பத்தி நிறைய செய்தி இருக்கு! தினமும் காலையில் பச்சையப்பன் முதலியார் கூவத்துல குளிச்சுட்டு பக்கத்துல இருக்குற ஆலயத்துல கோயில்ல வழிபடுவார்னு அவரோட டைரிக்குறிப்புகள்ல எழுதியிருக்கு! இப்ப கூட கூவத்துல குளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!! என்ன, குளிச்ச பிறகு அவர் எழுதுன மாதிரி டைரி எழுதறத்துக்கு தான் ஆள் இருக்கமாட்டாங்க!

நம்ம முன்னாடி பாத்த மாதிரி கூவத்துக்கு நீர் வரத்து குறைய ஆரம்பிச்சதிலிருந்து கூவம் டேமேஜ் ஆக ஆரம்பிச்சிடுச்சு! சென்னையோட மக்கள் தொகை 70 லட்சம். இவிங்க அத்தனை பேரோட கழிவு தாங்கியாக கூவம் மாறிடுச்சு!

இன்னைக்கு சென்னையில குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் ஒரு சரியான நதி இல்லாததுதான்றது பலரோட கருத்து! கையில தர்பூசணி வெச்சிகிட்டு செர்ரி பழத்துக்கு அலையுற மாதிரி (அடடடா என்ன உவமை! என்ன உவமை!) கூவத்தை டேமேஜ் பண்ணிட்டு தண்ணிக்காக வீராணம் வரைக்கும் பைப் போடறாங்க! இனிமேலாவது கூவத்தோட பாதைல இருக்கிற ஆக்கிரமுப்புகளை எல்லாம் அகற்றினாலாவது கூவம் ஓரளவுக்கு சரியாகுதான்னு பாப்போம்!


முடிக்கும் போது ஒரு பஞ்சோட முடிக்க வேணாமா! கூவம் ன்ற வார்த்தைக்கு “தூய ஊற்று நீர்”னு அர்த்தமாம்!! என்ன கொடுமை சரவணன் இது!!!

Tuesday, July 10, 2007

நாங்களும் எட்டு போட்டுட்டோம்ல!!

என் இனிய தமிழ் மக்களே!! (சும்மா ஒரு பாரதிராஜா எஃபெக்ட் கொடுக்கலாம்னுதான்). சிவனேனு கிடந்த என்னை எட்டுப்பதிவு போட சொல்லி கோர்த்து விட்டுட்டாரு நம்ம சிவீஆர் அண்ண்ன்! அது என்ன பெரிய கம்ப சாஸ்திரமா? நாமும் ஒரு கை பார்க்கலாம்னு துணிஞ்சு இறங்கி ஒரு சில எட்டுப் பதிவை படிச்சேன்! நம்ம பத்தி பெருமையான எட்டு விஷயங்கள சொல்ல்னுமாமே? முதல் பால்லயே கிளீன் போல்ட் ஆக்கிட்டாங்களேப்பா!! ‘ஏன் பிறந்தாய் மகனே’ ன்னு வீட்ல பாடிட்டு இருக்கும்போது நான் பாட்டுக்கு “நான் வல்லவன்! நல்லவன்! நாளும் தெரிஞ்சவன்! நாகரிகம் அறிஞ்சவன்”னு கதை விட்டேன்னு வெச்சுக்கங்க, வலைப்பதிவுன்னு கூட பாக்காம நிறைய பேர் கல்லை விட்டு அடிச்சுருவாங்க!

ஆனா நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு எழுத சொன்னதுக்காக ஏதாவது எழுத வேண்டாமா? சின்ன வயசுல இருந்தே கிறுக்குத்தனமா பல காரியம் பண்ணியிருக்கேன் அதுல ஒரு எட்டை (பத்தாது தான்!) இங்க எடுத்து விடுறேன்! இப்பவே சொல்லிட்டேன், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!

1. அப்ப நான் ரெண்டாப்பு படிச்சுட்டிருந்தேன்! (ஒரு கொசுவத்தி சுருளை எடுத்து மூஞ்சிக்கு நேரா சுத்திக்கோங்க! அப்பதான் ஃபிளாஷ் பேக் எஃபக்ட் வரும்!). காஞ்சிபுரத்தில படிச்சுட்டுருந்தேன்! ஒரு தடவை ஸ்கூல்ல ஆதரவற்றோர் பள்ளிக்காக துணி எல்லாம் சேகரிச்சுட்டு இருந்தாங்க! நானும் துணி எல்லாம் கொடுத்தேன்! அடுத்த நாள் தான் துணி எல்லாம் கொண்டு போறேன்னு சொல்லிருந்தாங்க! அடுத்த நாள் ஸ்கூலுக்கு போகும்போது வழில ஒரு மஞ்சள் ரோஜா பூத்திருந்துச்சு! சரி துணிகளோட சேர்த்து இதையும் கொடுத்தா நல்லா இருக்குமேன்னு கொண்டு போய் எங்க கிளாஸ் டீச்சர்ட்ட கொடுத்தேன்!
அவிங்க என்னடான்னா நான் அதை அவங்களுக்கு தான் கொடுக்கிறேன்னு நினைச்சுட்டு “ச்ச்சோ ஸ்வீட்” னு என் கன்னத்தை கிள்ளிட்டு அதை அவங்க தலைல வெச்சுகிட்டாங்க! நானும் ஹிஹிஹி னு வழிஞ்சுகிட்டே வந்து உக்காந்துட்டேன்! அப்ப மட்டும் நான் வழிஞ்ச வழிசலை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திருப்பி விட்டுருந்தாங்கன்னா முப்போகம் விளைஞ்சிருக்கும்!

2. எங்க ஸ்கூல்ல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல போட்டி வெப்பாங்க! அதுல பேச்சுப்போட்டி, கவிதை கட்டுரைன்னு எல்லாத்துலயம் நம்ம தான் கிங்! இத நம்பி ஒரு தடவை எங்க தமிழ் மிஸ் ஒரு டிராமா போட சொல்லி கோத்துவுட்டுட்டாங்க! அப்ப நான் ஏழாவது படிச்சுட்டிருந்தேன்! நானும் என் நண்பணும் மண்டையை பிச்சுகிட்டு ரெண்டு நாள் கழிச்சு ஒரு கதை ரெடி பண்ணோம்! கதைன்னா சாதாரண கதை இல்ல! ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமா ஊழலை ஒழிக்கணும், லஞ்சத்தை அழிக்கணும்னு செம கான்செப்ட்! மேடைல கார் சேஸிங் ஸீன் எல்லாம் பிளான் பண்ணி வெச்சிருந்தோம்னா பாத்துக்கோங்க! ஸ்கிரிப்ட் எழுதி எங்க மேடம் கிட்ட கொடுத்தா அவிங்க மயக்கமே போட்டுட்டாங்க!

"தம்பிகளா நான் ஸ்டேஜ்ல போடுறதுக்கு கதை கேட்டேன்பா! நீங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை ரெடி பண்ணிருக்கீங்க?"

"அப்ப இதை போட முடியாதுங்களா மேடம்?"

"இவ்வள்வு நேரம் என்ன தெலுங்குலயா சொல்லிட்டிருந்தேன்?" ன்னு எங்க முதல் கதைக்கே ஆப்பு வெச்சுட்டாங்க! இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குன்னு கட்டபொம்மன் டிராமா போடலாம்னு முடிவு பண்ணி என்னை கட்டபொம்மனாகவும் போட்டுட்டாங்க! எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, ஒரு சில நேரம் ஓவர் ஆக்டிங் பண்ணிடுவேன்!

அதே மாதிரி தான் அன்னைக்கு ஜாக்சன் துரை கிட்ட பேசும்போது






"டேய் துரை!
யாருகிட்ட கேக்குற திறை
நாய்க்கு போடுறது பொறை
நான் அடிச்சா உன் வாய்ல வரும் நுரை"
ன்னு டிஆர் ரேஞ்சுக்கு பேசிபுட்டேன்! எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்ப்ச்சுட்டாங்க! எங்க மேடத்துக்கு செம கோபம்! எனக்கும் ஒரு மாதிரி ஆயிடுச்சு! எப்படியாவது விட்ட பேரை திரும்பி வாங்கணம்னு முடிவு பண்ணி அப்புறமா மாவட்ட சுகாதார நிர்வாகம் நடத்துன ஒரு போட்டில மலேரியாவை பத்தி ஒரு நாடகம் போட்டு கலெக்டர் கையால மேடத்தை பரிசு வாங்க வெச்சோம்!

3. +2 முடிச்ச பிறகு ஐஐடி எண்ட்ரன்ஸ்க்கு அப்ளை பண்ணிருந்தேன்! (சும்மா ஒரு டைம் பாசுக்குத்தான்). நான் வீட்டுல வெட்டியா உக்காந்திட்டிருந்ததை பாத்து டவுட் ஆகிட்டாங்க! பிரிலிம்ஸ்கு ஒரு ரெண்டு நாள் இருக்கும்போது எப்பப்ப எந்த எக்ஸாம்னு கேட்டாங்க! நானும் சொன்னேன்! அப்புறமா ஹால் டிக்கெட் வாங்கி பாத்தவுடனே கடுப்பாயிட்டாங்க! ஏன்னா நான் பிரிலிம்ஸ் எக்ஸாம்கு பதில் மெயின் எக்ஸாம் டைம்டேபிள் சொல்லிட்டேன்! "பிரிலிம்ஸ்கும் மெயின்ஸ்குமே உனக்கு வித்தியாசம் தெரியலை! நீ எல்லாம் எக்ஸாம் எழுதி என்ன சாதிக்கப்போற? பேசாம வீட்டுலய உக்காரு" ன்னுடாங்க! நானும் ஐஐடி கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு ஃபிரியா விட்டுட்டேன்!

4) ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கும்போது தமிழ்ல பேசக்கூடாதுன்னு ஒரே கெடுபிடி! அதுவும் ஒரு மேடத்துக்கு என் மேல செம காண்டு! எப்ப பாத்தாலும் தமிழ்ல பேசிட்டான்னு கோத்து விட்டுடும்! பழி வாங்கறதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ ஒரு சான்ஸ் கிடைச்சுது! எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே அப்ப நாங்க தான் போய் சின்ன பசங்களுக்கு கிளாஸ் எடுக்கணும். இது தான் சான்ஸ்னு அந்த மேடம் கிளாஸுக்கு போனேன்! அங்க ஒரு பையனை எழுப்பி பா பா பிளாக் ஷீப் பாட்டு பாட சொன்னேன்! அவனும் எழுந்து சொன்னான்! இனிமே அப்படி சொல்லக்கூடாதுன்னு தமிழ்ல சொல்லி குடுத்துட்டேன்! தமிழ்ல எப்படின்னா

"செம்றி ஆடே செம்றி ஆடே கம்ப்ளி கீதா?
கீது மச்சி கீது மச்சி மூணு மூட்டை"
னு செம லோக்கலா இருக்கும்! நான் சொல்லி கொடுத்து முடிச்சவுடனே கரெக்டா அந்த மேடம் உள்ளே வந்துட்டாங்க! அப்புறம் என்ன? எப்பவும் போலவே அர்ச்சனை தான்!

5) ஒரு தடவை நானும் என் பிரண்ட்ஸும் வீட்டுகு வெளில நிந்து பேசிக்கிட்டிருந்தோம்! அப்ப பாத்து எங்க டியூஷன்ல படிக்கிற பொண்ணுங்க போனாங்க! நான் பாட்டுக்கு சும்மா இல்லாம பிரெண்டோட வண்டியை எடுத்துகிட்டு செம ஸ்பீட்ல ஒவர் டேக் பண்ணி டக்குனு அடுத்த தெருவுல கட் பண்ணேன்! அப்பன்னு பாத்து எவனோ படுபாவி ஒரு செங்கலை போட்டு வெச்சிருந்திருக்கான்! டமால்னு கீழே விழுந்ததோட இல்லாம வண்டியும் கரெக்டா என் மேலயே விழுந்துடுச்சு! நல்ல வேளையா அந்த பொண்னுங்க வேற வழில போய்ட்டதால இந்த கூத்தை பாக்கலை! நானும் மீசைல மண் ஒட்டாத வரைக்கும் சந்தோஷம்னு அப்படியே திரும்பி வந்துட்டேன்!

6) நாட்டு நலப்பணித்திட்டத்தில நிறைய கேம்ப் அட்டெண்ட் பண்ணிருக்கேன்! ஒரு தடவை வீடு வீடா போய் பிரச்சாரம் பண்ண சொன்னாங்க! நாங்களும் சரின்னு போய் பண்ணிட்டிருந்தோம்! ஒரு வீட்ல வயசான அம்மா ஒருத்தங்க இருந்தாங்க! அவிங்க கிட்ட போய் "பாட்டி நாங்க நாட்டு நலப்பணித் திட்டதில இருந்து வரோம்" னு சொன்னது தான் தாமதம், அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க! பாவம் அவிங்க யார் மேல என்ன கொலை வெறில இருந்தாங்களோ? விட்டா போதும்னு அடிச்சு ஓடி வந்துட்டோம்!

7) கேம்ப்ல சும்மா சுத்திகிட்டிருக்கும்போது என் பிரெண்டஸ் எல்லாம் அங்க இருக்கிற சின்ன பசங்களை கூப்பிட்டு என்னை காமிச்சு "அண்ணன் நல்லவரு! வல்லவரு! நாளும் தெரிஞ்சவரு"ன்னு சொல்ற மாதிரி பக்காவா டிரெயினிங் கொடுத்துட்டாங்க! சரி நம்மளை பத்தி பெருமையாத்தானே பேசுறாங்கன்னு நானும் கண்டுக்காம விட்டுட்டேன்! 'தீப்பொறி தினேஷ்'னு பட்டம் வேற கொடுத்துட்டாங்க! ஒரு நாள் பட்டி மன்றம் பேச என்னை கூப்பிட்டு இருந்தாங்க! அந்த ஊரே கூடி இருந்தது! மைக் முன்னாடி நிந்தவுடனே அங்க இருந்த பசங்க எல்லாம் கோரஸா "அண்ணன் நல்லவரு! வல்லவரு! நாளும் தெரிஞ்சவரு! அண்ணன் தீப்பொறி தினேஷ் வாழ்க!"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டானுக! அடப்பாவிகளா இதுக்கு தான் இவ்வளவு டிரெயினிங்கா? ஊரே சிரிச்சுட்டிருந்துது! இருந்தாலும் "உங்கள் பேராதரவுக்கு நன்றி" ன்னு சமாளிச்சு ஒரு வழியா பேசி முடிச்சுட்டேன்!








8) பட்டி மன்றத்துல எப்பவும் முதல்ல பேசறவுங்க பாடு ரொம்ப திண்டாட்டம்! எல்லாமே சொந்த கருத்தா சொல்லனும்! அந்த பட்டி மன்றத்துல நான் தான் முதல்ல பேசணும்! எனக்கு அப்புறம் பேசுன யாருமே எதுவும் தயார் பண்ணலை போலிருக்கு! பொண்ணுங்க முதற்கொண்டு எல்லாரும் நான் பேசுனதை வைச்சு என்னை காய்ச்சி எடுத்துட்டாங்க! பட்டிமன்றம் முடிச்சு கீழே வந்தவுடனே ஒரு பையன் வந்து "திப்பொறி அண்ணா! பட்டி மன்றத்துல ஏன் எல்லாரும் உங்களையே கிழிச்சாங்க"ன்னு கேட்டான்! எல்லாரும் வுழுந்து வுழுந்து சிரிச்சிட்டாங்க! ஒரு வழியா சமாளிச்சிட்டு வந்துட்டேன்!


இதோட என் எட்டு பதிவை நிறைவு செய்திக்கிறேன்! இதுனால நான் சொல்லிகிறது என்னன்னா, தொபுகடீர்னு கீழே விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டலைன்னு சந்தோஷமா கிளம்பி போய்ட்டே இருங்க!

வர்ட்டா?

Thursday, June 28, 2007

ஊர்களும் அதன் பெயர்களும்!

அன்பார்ந்த நண்பர்களே!! இந்த வலைப்பதிவைத் தொடங்கும்முன் உங்கள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை! இப்பதிவை நான் முழுவதும் தூய தமிழில் எழுதலாமென்று முடிவு செய்துள்ளேன்! ஆகையால் பலவீனமான இதயம் உடையோர் மேற்கொண்டு படிப்பதைப்பற்றி நன்கு யோசித்து செயல்படுங்கள்! பதிவுக்கு செல்வோமா?

நான் படிப்பது இயந்திரவியல் எனினும், வரலாற்றின் மேல் எனக்கு அளவு கடந்த காதல் உண்டு! (வரலாறு பாடத்தின் மேல்! ‘வரலாறு’ படத்தின் மேல் அல்ல!) வியப்பூட்டும் செய்திகள் வரலாற்றில் பல இருப்பினும், இன்று நாம் வசித்து கொண்டிருக்கும் ஊர்களுக்கு பெயர்கள் எப்படி வந்தன என்று பார்த்தோமானால், அவற்றின் பின் உள்ள கதைகளும், நிகழ்வுகளும் மிகவும் சுவாரசியமானவை! ஏதோ எனக்குத் தெரிந்த மட்டில் சில ஊர்களைப்பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

சென்னை:

தமிழகத்தின் தற்போதைய தலைநகருக்கு சென்னை என்று பெயர் ஏற்பட்டது, ஆங்கிலேயர் காலத்தில்! அக்காலத்தில் நம் நாட்டையும் அதன் வளங்களையும் பங்கு போட்டு கொள்வதில் ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கடும் போட்டி இருந்தன! அப்போதைய மதராஸ் ராஜதானி இருந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்தபொழுது போர்த்துகீசியர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒரு கோட்டை கட்ட வேண்டுமென்று முடிவு செய்தனர்!

கோட்டைக்கு நிலம் தேடிக்கொண்டிருந்த பொழுது இப்போது கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தினருகே கோட்டையை அமைத்தால் உள்நாட்டு வாணிபத்துக்கும் கடல் வாணிபத்துக்கும் உதவியாக இருக்குமென்று எண்ணினர். அப்போது சென்னை இருந்த இடம், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு நிலச்சுவான்தாரிடம் இருந்தது. அவரும் ஆங்கிலேயர்களுக்கு தம் நிலத்தை அளிக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்! ஆனால் புதிதாக உருவாகும் அவ்விடத்துக்கு தம் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை சூட்ட வேண்டும் என்று விழைந்தார்.

அதன் பெயரிலே அவ்விடத்துக்கு சென்னை என்று பெயர் வழங்கப்பட்டது! ஆங்கிலேயர்கள் அன்று கட்டிய கோட்டைதான் இன்று பல அரசியல்வாதிகள் உள்ளே நுழைவதற்கு பகீரதப்பிராயத்தனம் செய்து கொண்டிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை!!

வீராணம் ஏரி:

சென்னையைப்பற்றி பார்த்தோம்! சென்னையின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியைப்பற்றிப் பார்ப்போம். வீரநாராயணபுரம் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என்றாயிற்று. இப்போதய கடலூர் மாவட்டத்தில் இருக்கும் இவ்வேரி சோழர் காலத்தில் எடுப்பிக்கப் பட்டது. ‘பொற்கூரை வேய்ந்த தேவர்’ என்றழைக்கப்படும் பராந்தக சோழர் இவ்வேரியை தூர் வாரி கரை எழுப்பினார்.

அப்பொழுதைய கால்த்தில் இவ்வேரி அமைந்த இடம், பாரேழு வள்ளல்களில் ஒருவரான ‘வல்வில் ஓரி’யின் வழி வந்த கடம்பூர் சிற்றரசுக்கு அருகில் இருந்தது. வழி வழியாக சோழ குலத்துக்கு தோள் கொடுத்த கடம்பூர் சிற்றரசின் மக்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டே பராந்தகச்சோழர் இவ்வேரியை ஏற்படுத்தினார்.

கோயம்புத்தூர்:

முன்னொரு காலத்தில் கோவன் என்ற கொங்கு நாட்டை சேர்ந்த சிற்றரசன் புதூர் எனும் பகுதியை ஆண்டு வந்தான். ‘கோவன் ஆண்ட புதூர்’ என்பதே காலப்போக்கில் மருவி கோயம்பத்தூர் என்றாயிற்று.


திருநெல்வேலி:

தாமிரபரணி ஆற்றினாலேயே திருநெல்வேலிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது. இப்பொழுது மிகவும் சிறியதாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன! அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருநெல்வேலி இப்பொழுது இருந்த இடத்தில் நெல் பரவலாக பயிரிடப்பட்டிருந்தது. தாமிரபரணி நதியானது, நெல்லை வழியாக பாயும்பொழுது, பாசனத்துக்கு தண்ணீர் அளித்ததோடில்லாமல் ஆற்றின் கரைகளையும் பலப்படுத்திக்கொண்டே சென்றது! ஆகையால் எத்தகைய வெள்ளமும் அச்சீமையில் விளைந்திருக்கும் நெல்லை ஒன்றும் செய்ய முடியவில்லை. நெல்லுக்கு வேலியாய் இருப்பதினால் நெல்வேலி என்றும், அருள்மிகு நெல்லையப்பர் எழுந்தருளியுள்ளதனால் திரு என்ற அடையுடன் திருநெல்வேலி என்றும் பெயர் பெற்றது!

என் இன்னொரு நண்பர் கூறியதாவது:

ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன், நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பேர் வந்ததாக இருந்த்து.

எது உண்மை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :)

தஞ்சை பெரிய கோயில்:

பொன்னியின் செல்வன் எனப்படும் இராஜ இராஜ சோழன் எழுப்பிய கோயில் இப்பெரிய கோவில் ஆகும். பொன்னியின் செலவர் வாலிபராய் இருந்தபொழுது அவருடைய தந்தை சுந்தரசோழர் ஆட்சி புரிந்தார். அப்பொழுது பாண்டியனுக்கு உதவி செய்த இலங்கை அரசன் மகிந்தனை அடியோடு அழிக்கும் பொருட்டு இலங்கை சென்றிருந்தார். அங்கே மகிந்தனின் படைகளை துரத்தி ‘ஈழங்கொண்ட வீரர்’ என்ற பட்டத்தையும் பெற்றார். ஓடி ஒளிந்த மகிந்தனை தேடி சிலகாலம் இலங்கையில் தங்க நேர்ந்த பொழுது அங்கு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருந்த புத்த சிலைகளை கண்டு வியப்புற்றார். பிற்பாடு தான் சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு, உலகமே வியக்கும்படி தமிழகத்தில் இத்தைகைய விண்ணுயர சிவாலயங்களை எழுப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். அதன் பெயரிலேயே சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தார்.



இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை எனும் ஊர், சென்னையிலிருந்து 112 km தூரத்தில் உள்ளது! தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடம் என்று கூறும் அளவிற்கு தோல் தொழிற்சாலைகளால் நிரம்பியுள்ளது! இராணிப்பேட்டைக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று பார்த்தோமானால், ஆங்கிலேய பிரபு ஒருவரும் அவர் துணைவியும் அலுவல் நிமித்தமாக ராணிப்பேட்டையில் தங்கியிருந்தனர்! ஆங்கிலேயரின் துணைவியாருக்கு இந்திய கலாச்சாரத்தின் மேல் அளவு கடந்த பற்று! அப்பொழுது உடன் கட்டை ஏறுதல் தமிழ் கலாசாரத்தில் மிக்க பரவலாக காணப்பட்டது!

அதே போல் அப்பிரபு உயிர்துறந்தபின் ஆங்கிலேய ராணி, தமிழ் பெண்களைப்போலவே உடன்கட்டை ஏறி தம் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் தியாகத்தினாலேயே ராணிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது!

நண்பர்களே! ஏதோ எனக்கு தெரிந்த வரையில் சில ஊர்களைப்பற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கும் இதைப்பற்றி தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். கண்டிப்பாக பதிவில் ஏற்றி விடுகிறேன்!

அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்வரை விடை பெறுகிறேன்!

வணக்கம்!!