Friday, January 18, 2008

பயணக்குறிப்புகள் – பாகம் 2

இஸ்கூல் படிக்கும்போது பசங்க எல்லாம் சேர்ந்து நிறைய ஊர் மேய்ஞ்சுருக்கோம்! ஊர் மேய்ஞ்சு ரொம்ப நாள் ஆச்சுன்னு ஃபீல் பண்ணிட்டிருந்தப்போ திடீர்னு ஒரு சான்ஸ் கிடைக்க, ஜூட் விட்டேன்! அதான் இந்த பயணக்குறிப்புகள் பாகம் 2!!

தமிழ்நாட்டுல செய்யூர், சூனாம்பேடுன்னு ஊருங்க இருக்கிறது நிறைய பேருக்கு தெரியாது! (எனக்கே போன பிறகு தான் தெரிஞ்சுதுன்றது வேற விஷயம்!) கிழக்கு கடற்கரை சாலையில காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் மரக்காணத்துக்கு பக்கத்துல கொஞ்சம் உள்வாங்குன ஊர் தான் ஆலம்பாறை! இங்க ஒரு சிதிலடைஞ்ச கோட்டை இருக்கு! நமக்கு தான் வரலாறுன்னா ரொம்ப பிடிக்குமே! அதான் அந்த இடத்தை தேடிக் கண்டுபிடிச்சு போய் சேர்ந்தேன்! தமிழ்நாடு தொல்பொருள் கழகத்தோட கட்டுப்பாட்டுல இருக்கிறதால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமா பராமரிச்சிருந்தாங்க! சொல்லப்போனா ஒரு போர்டு வெச்சதோட அந்த பக்கமே எட்டிப்பாக்கலைன்னு நினைக்கிறேன்!!


இந்த கோட்டையின் வரலாறு:

கி.பி 1735 ஆம் ஆண்டு, நவாப் தோஸ்த் அலிகான் இந்த கோட்டையை ஆண்டு கொண்டிருந்தார்! கி.பி 1750 இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய ஃபிரெஞ்சு தளபதி ட்யூப்ளக்ஸுக்கு இந்த கோட்டையை அப்போதைய நவாப் சுபேதார் முசாஃபர்ஜங் பரிசளித்தார்! பின்னர் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் அதை சேதப்படுத்தினர். அதற்கேற்ப இப்பொழுது அக்கோட்டையில் வெறும் இடிபாடுகளே உள்ளன!

இப்பொழுது மீண்டும் கோட்டைக்கு செல்வோம்! கோட்டையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது கூடவே அந்த ஊர் சிறுவன் ஒருவன் இருந்தான். ஒரு இடத்தில் மிகவும் பாழடைந்த பகுதியின் உள்ளே சென்று பார்த்துட்டு திரும்பும்போது, அந்த பையன், “உள்ளே எப்பவும் நரியெல்லாம் இருக்குமே அண்ணா! நேத்து கூட பெரிய்ய பாம்பு ஒண்ணு அடிச்சாங்களே? நீங்க எதுவும் பார்க்கலையா அண்ணா” என்றான்!!! ஏண்டா? எத்தனை பேருடா இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க? உள்ளே போற வரைக்கும் என்னடா பண்ணிட்டிருந்தே? போய்ட்டு வந்த பிறகு சொல்ற?


அதுக்கப்புறம் ஆராய்ச்சி பண்றத்துக்கு மூட் இல்லாததால (பயம் எல்லாம் ஒண்ணுமில்லை! :) ) அப்படியே கடல் பக்கமா போனேன்! கடலுக்கும் கோட்டைக்கும் ஒரு 50 மீட்டர் தொலைவு கூட இருக்காது!! அதுக்கப்புறம் கடல்ல மோட்டார் படகுல ஒரு ரவுண்ட் போனேன்!!


அது என்ன்ன்னு தெரியல! தண்ணியை பார்த்தாலே (எல்லா தண்ணியையும் சேர்த்துதான் சொல்றேன்) மனுஷனுக்கு குதூகலம் பிச்சிகிட்டு வருது! அதுவும் அப்படி ஒரு மோட்டார் படகு சவாரி அட்டகாசமா இருந்தது!! அலை வரும்போது அதை எதிர்த்து படகு போகும்! அப்ப அலை மேல படகு போற ஒரு சில நொடி வானத்துல பறக்குற மாதிரியே இருக்கும்! பின்னாடி அலையில இருந்து கீழே இறங்கும்போது அதலபாதாளத்துல விழுற மாதிரியே இருக்கும்!இப்படியே ஒரு அரை மணி நேரத்துக்கு ஆனந்தமா பயணம் செஞ்சு முடிச்சபிறகு கிளம்பலாம்னு தோணிச்சு! கிளம்புறதுக்கு முன்னாடி ஊர்க்காரங்க நிறைய பேரு வந்துட்டாங்க! இளநீர் எல்லாம் வெட்டி கொடுத்து சரியான உபசரிப்பு தான் போங்க! சுனாமியால எல்லாத்தையும் இழந்துட்டு இப்பதான் மெல்ல வாழ்க்கையை திரும்பி இயல்பாக்கிட்டு வந்துட்டிருந்தாலும் பண்பாடு, விருந்தோம்பல் – இது எதையும் மறக்காம இருக்கிற இவங்க கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டியது இன்னும் ஏராளம்!!
மதிய உணவை ஈ.சீ.ஆர் தாபாவுல முடிச்சுட்டு தக்ஷின சித்ராவுக்கு போனேன்!
பண்டைய தென்னிந்திய கலாசாரத்தை எந்த ஒரு குறையும் இல்லாம அப்படியே நம்ம கண் முன்னாடி காட்டியிருக்காங்க! தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களில் எழுத்துக்களின் வளர்ச்சி, வீடு கட்டிய முறை ஆகியவை தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன! அதிலும் தமிழகத்தில் பண்டைய குயவர், கொல்லர், அந்தணர், ஆடை நெய்பவர் ஆகியோரின் வீடுகள் குறிப்பிடத்தக்கவை!
இது மட்டுமன்றி இடையே மயிலாட்டம், கரகாட்டம் போன்ற சிறப்புகளும் உண்டு!!
இனி கிழக்கு கடற்கரை வழியாக நீங்கள் செல்ல நேர்ந்தால் மறக்காமல் இந்த இடங்களை பார்த்து விட்டு செல்லுங்கள்!

அடுத்த பதிவு: நான் இதுவரை ரசித்து ருசித்த உணவு மற்றும் உணவகங்கள் பற்றி!!